தொழிலாளி வீட்டில் ரூ.12 லட்சம் நகைகள் திருட்டு

ஆம்பூர் அருகே பட்டப்பகலில் தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2023-04-27 19:40 GMT

பூட்டு உடைப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சின்னபள்ளி குப்பம் ஊராட்சி காட்டு வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 50). இவர் வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் வாணியம்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிக்கொண்டு கணவன், மனைவி இருவரும் வேலைக்கும், மகள்கள் கல்லூரிக்கும் சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.

28 பவுன் நகை திருட்டு

இரவில் நாராயணன் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.

பீரோவில் வைத்திருந்த சுமார் 28 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து நாராயணன் உமராபாத் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்