கோவை வாலிபரிடம் ரூ.12¼ லட்சம் மோசடி

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி கோவை வாலிபரிடம் ரூ.12¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-05 18:45 GMT

கோவை

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி கோவை வாலிபரிடம் ரூ.12¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யூ-டியூப் சேனல்கள்

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைன் மூலம் ஒரு வேலை இருப்பதாகவும், யூ-டியூப் சேனல்களை 'சப்ஸ்கிரைப்' செய்து வந்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு லிங்க் வந்தது.

தொடர்ந்து சக்திவேல் லிங்க்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார். பின்னர் அவர் சில யூ-டியூப் சேனல்களை 'சப்ஸ்கிரைப்' செய்தார். இதனால் அவருக்கு சில நாட்களில் ரூ.1,050 வருமானம் கிடைத்தது.

ரூ.12¼ லட்சம்

இந்த நிலையில் சக்திவேலை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், நாங்கள் கொடுக்கும் வேலைகளை ஆன்லைன் மூலம் செய்து கொடுத்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனை நம்பிய சக்திவேல் சிறிது, சிறிதாக அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் பணம் செலுத்தினார். இவ்வாறு அவர் பல்வேறு கட்டங்களாக ரூ.12 லட்சத்து 20 ஆயிரத்தை அனுப்பினார். ஆனால் சக்திவேலுக்கு ஆன்லைன் முதலீட்டில் லாபம் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அவரால் முதலீட்டு பணத்தை திரும்ப பெறவும் முடியவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடி அதிகரிப்பு

கோவை மாநகரில் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை இழந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களின் வழிகாட்டுதலின்படி ஆன்லைனில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்