12 நாட்கள் ஆன்மிக ரெயில் சுற்றுலா
ரெயில்வேத்துறை சார்பில் வருகிற 1-ந் தேதி முதல் 12 நாட்கள் ஆன்மிக ரெயில் தசுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்தார்.
காட்பாடி
ரெயில்வேத்துறை சார்பில் வருகிற 1-ந் தேதி முதல் 12 நாட்கள் ஆன்மிக ரெயில் தசுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்தார்.
ஆன்மிக சுற்றுலா
இந்திய ரெயில்வே சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல பொதுமேலாளர் ரவிக்குமார் காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய ரெயில்வேயில் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சியானது சுற்றுலா பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 ஸ்லீப்பர் கோச்சுகள், ஒரு பேண்டரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.
பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டலம் சார்பில் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
12 நாட்கள்
அதன்படி வருகிற 1-ந்தேதி சுற்றுப்பயணம் தொடங்குகிறது.
தொடர்ந்து 11 இரவு, 12 நாட்கள் சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரெயிலில் சென்று ஐதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவி தேவி கோவில், அமிர்தசரஸ், புதுடெல்லி ஆகிய இடங்களை பார்வையிடலாம். கொச்சுவேலியில் இருந்து ரெயில் புறப்பட்டு நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூரை அடையும்.
இதில் பயணம் செய்ய ஸ்லீப்பர் கோச்சில் ஒருவருக்கு ரூ.22,350, ஏ.சி கோச்சில் பயணிக்க ரூ.40,380 கட்டணம் ஆகும்.
ஏ.சி., ஸ்லீப்பர் வகுப்பில் ரெயில் பயணம், தங்குமிடம், உள்ளூர் பார்வையிடுவதற்கான போக்குவரத்து வசதி, ரெயில் பயணத்தின் போது தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி, பயணிகளின் காப்புறுதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சென்னை கோட்ட துணை மேலாளர் மாலதி உடன் இருந்தார்.