ரூ.12¾ கோடியில் சாலை அமைப்பு
வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.12¾ கோடியில் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.
வேலூர் மாநகராட்சி 19,20-வது வார்டுகளுக்கு உட்பட்ட சத்துவாச்சாரி தண்டுமாரியம்மன் கோவில் முதல் வள்ளலார் டபுள்ரோடு வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 78 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 19-வது வார்டு வேளாளர் தெருவில் பாதாள சாக்கடை திட்டம், கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவுற்று சிமெண்டு சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணியை வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர், சிமெண்டு சாலை தரமாகவும், குறிப்பிட்ட உயரத்தில் அமைக்கப்படுகிறதா?, மழைநீர் செல்வதற்கு இடம் உள்ளதா என்று பார்வையிட்டார். அந்த பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் விரைந்து சாலை பணிகளை முடிக்க வேண்டும் என்று மேயர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது 2-வது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், கவுன்சிலர் மாலதி, உதவி வருவாய் அலுவலர் குமரவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.