ஜெயலலிதா கோவிலில் 11-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா

எடப்பாடி பழனிசாமி தலைமையில் 51 ஜோடிகளுக்கு திருமணம் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இதற்காக ஜெயலலிதா கோவிலில் 11-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா நடக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2022-12-08 20:23 GMT

எடப்பாடி பழனிசாமி தலைமையில் 51 ஜோடிகளுக்கு திருமணம் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இதற்காக ஜெயலலிதா கோவிலில் 11-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா நடக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சாமி தரிசனம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழகர்கோவில், பழமுதிர்சோலை ஆகிய கோவிலில் ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெறும் திருமண விழாவிற்கான அழைப்பிதழ்களை தனது குடும்பத்துடன் சென்று வைத்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், எத்தனை நலத்திட்ட உதவிகள் செய்தாலும், அவருக்கு பிடித்த நிகழ்ச்சி திருமண விழா நிகழ்ச்சியாகும். அவர் இருக்கும்போது ஜெயலலிதா பேரவையின் சார்பில் 80 திருமணத்தை நடத்தினோம்.அதனை தொடர்ந்து ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் 120 ஏழை, எளிய மணமக்களுக்கு திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.

51 ஏழைகளுக்கு திருமண விழா

தற்போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டும், அ.தி.மு.க. 51-வது பொன்விழா ஆண்டையொட்டி, ஜெயலலிதா பேரவையின் சார்பில் எனது மகள் பிரியதர்ஷினி திருமணம் உள்பட 51 ஏழை எளிய மணமக்களுக்கு சமத்துவ, சமுதாய திருமண விழாவினை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகிற பிப்ரவரி 23-ந் தேதி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

11-ந்தேதி முகூர்த்தகால் நடும் விழா

சமத்துவ சமுதாய திருமணவிழா என்பது, எல்லோருக்கும் சமத்துவம் படைக்கும் வகையில் அடித்தளமாக இருக்கும். இந்த திருமண விழாவிற்கான முகூர்த்த கால் அமைக்கும் பணி வருகிற, 11-ந் தேதி காலை 10 மணிக்கு டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நடைபெறுகிறது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தங்கமணி, வேலுமணி, காமராஜ், செல்லூர் கே ராஜு, டாக்டர் விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம். கே.டி.ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, கருப்புசாமி பாண்டியன், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, ரவிச்சந்திரன், செந்தில்நாதன், எம்.ஏ.முனியசாமி குட்டியப்பா, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சமத்துவ சமுதாய திருமண விழா ஜெயலலிதா பேரவையின் சார்பில் அனைத்து நல்ல உள்ளங்களின் பங்களிப்புடன், நிதி உதவியுடன் நடைபெறுகிறது. தனிப்பட்ட முறையில் நான் நடத்தும் திருமணவிழா அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்