கி.பி.11-ம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு

வேடசந்தூர் அருகே கி.பி.11-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2022-08-14 17:46 GMT

வேடசந்தூரை அடுத்த தொன்னிக்கல்பட்டி கிராமத்தின் அருகேயுள்ள குடகனாற்றின் மேற்கு கரையில் செக்கு உரல் கல்வெட்டு ஒன்று இருந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் சி.மாணிக்கராஜ், ரா.உதயகுமார், ஆ.கருப்பையா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் அங்கு வந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.

இது பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், செக்கு உரலில் மைப்படி எடுத்த கல்வெட்டை கல்வெட்டு வல்லுனர் சாந்தலிங்கம் உதவியுடன் படித்து பார்க்கப்பட்டது. இது 11-ம் நூற்றாண்டை சேர்ந்தது ஆகும். அதன் மேல் பகுதியில் 2 கல்வெட்டில், தலையூர் என்ற ஊரை சேர்ந்த கிட்சேரி புறன்டி வேட்டுவன் உத்தமன் போத்தன் நான சோழபாண்டியப் பல்லவரையன் மக்கள் போத்த வீமனும், போத்த நாச்சியுமிட்ட செக்கு என்று 2 வரிகள் இடம் பெற்றுள்ளது.

அந்த கல்வெட்டின் அருகில் உள்ள மற்றொரு தனிப்பாறையில் போத்த நாச்சி உரல் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பயன்பாட்டிற்காக சோழ பாண்டிய பல்லவராயனின் மகன் போத்தவீமனும், மகள் போத்த நாச்சியும் செக்கை செய்து கொடுத்துள்ளனர் என்று தெரியவருகிறது. மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றை அறிவதற்கு இந்த செக்கு உரல் கல்வெட்டு முக்கிய வரலாற்று ஆவணமாக அமையும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்