கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண காரணம்..! - சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சி தகவல்கள்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் 1,152 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-15 08:04 GMT

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை 17-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர். பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவர வழக்கில் சிபிசிஐடி போலீசார் 1,152 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி ஆய்வாளர் தனலட்சுமி விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். 9 மாத விசாரணைக்கு பிறகு சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அதில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தற்கொலையே - பாலியல் தொந்தரவு, கொலைக்கான ஆதாரம் இல்லை எனவும், பள்ளி தாளாளர், செயலாளர், ஆசிரியர்களின் துன்புறுத்தல் எதுவும் இல்லை என சாட்சிகள் கூறியதாகவும், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் மாணவி இறப்புக்கு காரணம் இல்லை என சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சக மாணவர்கள், சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீமதிக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என தெரியவந்துள்ளது என்றும், மாணவி ஸ்ரீமதி தங்கியிருந்த விடுதியை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெறவில்லை எனவும், மாணவி இறந்த அன்றே, இறப்புக்கான காரணத்தை காவல்துறை சொல்லி இருந்தால் தொடர் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது எனவும் தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டத்தை, கனியாமூர் பள்ளி பின்பற்றவில்லை என்பதால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



Full View


மேலும் செய்திகள்