காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1,124 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1,124 மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார். விழாவில் மத்திய மந்திரி, அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-01-22 21:48 GMT

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். விழாவிற்கு உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி முன்னிலை வகித்தார்.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி வரவேற்று பல்கலைக்கழகத்தின் சாதனைகளை விளக்கி உரை நிகழ்த்தினார். மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மந்திரி தர்மேந்திர பிரதான் பட்டமளிப்பு விழா பேரூரை நிகழ்த்தினார்.

விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், கவர்னரின் முதன்மைச்செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டில், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், கவர்னரின் துணைச்செயலாளர் பிரசன்னா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

உறுதிமொழி

பின்னர் 1,124 மாணவ-மாணவியருக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார். பட்டம் பெற்ற மாணவர்கள் கவர்னரின் உறுதிமொழியை ஏற்றனர்.

பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி அழகப்பா பல்கலைக்கழக திறன் மேற்கு மேம்பாட்டு மையம், வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகம், தமிழ் பண்பாட்டு மையம் ஆகியவற்றை பார்வையிட்டார். பிறகு அழகப்பா பல்கலைக்கழகத்தின் அறிவியல் வளாகத்தை பார்த்தார். இதைத்தொடர்ந்து உயர் கணித ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கணித மேதை சீனிவாச ராமானுஜன் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். விழா முடிந்ததும் அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவி பிள்ளையார்பட்டி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்