செம்பியன் மாதேவியின் 1,113-ம் ஆண்டு பிறந்தநாள் விழா
செம்பியன் மாதேவியின் 1,113-ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சோழ வம்சத்து பேரரசியான செம்பியன் மாதேவியின் 1,113-வது பிறந்தநாள் விழா அவரின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செம்பியக்குடி கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இவர் பேரரசர் ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியாரும், கண்டராதித்த சோழனின் மனைவியும் ஆவார். தற்போது வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படங்களில் கூட இவரின் கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும். இவரின் ஆட்சி காலத்தில் 6 பேரரசர்களை கண்டு வழிநடத்திய ஒரே ராணியாவார். அவர் ஆட்சி காலத்தில் பல வளர்ச்சி பணிகளையும், தொண்டுகளையும் செய்து வந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் அவர் சாதனைகள் குறித்தும் அவர் பெருமை குறித்தும் எவ்வித குறிப்புகளும் வரவில்லை. இதனை இப்பகுதி மக்கள் வருத்தமாக பார்க்கின்றனர். இத்தகைய புகழ்பெற்ற இவரின் புகழை உயர்த்தும் வண்ணம் அப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்று சேர்ந்து அவரவர் வீட்டில் இருந்த உலோக பாத்திரங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து ஆயிரம் கிலோ எடையுடைய ஐம்பொன்னால் ஆன செம்பியன் மாதேவி சிலையை செய்து அக்கிராமத்தின் நடுவில் வைத்து இன்றும் வழிபாடு செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அவரின் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் செம்பியன்மாதேவியின் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், செம்பியன் மாதேவியின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.