1100 ஆண்டு பழைமையான நடுகல் கண்டெடுப்பு
1100 ஆண்டு பழைமையான நடுகல் கண்டெடுப்பு
திருப்பூர்
மலை வளமும், இயற்கை நில வளமும் நிறைந்த நிலப்பரப்பாக தொன்றுதொட்டு திகழ்ந்து வருவது தென்கொங்கு பகுதி ஆகும். தொல் பழங்காலப்பாறை ஒவியங்களும், பெருங்கற்கால சின்னங்களும், முதுமக்கள் தாழிகள் என பல தொல்பொருட்களும் ஆங்காங்கே கிடைத்துள்ளன. சங்க காலத் தமிழ் மக்கள் ரோமானிய நாட்டுடன் மேற்கொண்டு இருந்த வணிகத்தை மெய்ப்பிக்கும் வகையில் ரோமானிய நாணயங்களும், வீரநாராயண பெருவழி, சோழமாதேவி பெருவழி, கொழும பெருவழி எனப் பலபெறுவழிகளையும் தன்னகத்தே கொண்டதுதான் தென் கொங்குமண்டலம்.
வரலாற்று சிறப்புமிக்க தென் கொங்கு பகுதியில் உள்ள ரவி மங்கலத்தில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், சு. சதாசிவம் மற்றும் க.பொன்னுச்சாமி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிபி.10 ஆம்நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து பொறிப்புடன் கூடிய நடு கல் ஒன்றைக்கண்டறிந்துள்ளனர். இதைப்பற்றி ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் ரவிக்குமார் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் பழனிக்கு மேற்கில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் தான் இரவிமங்கலம். கி.பி.9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுகளில் சங்ககால சேரர்களின் கிளை மரபினர் தென் கொங்கு எனப்பட்ட பழனி, உடுமலை, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் சிற்றரசர்களாக ஆட்சி புரிந்துள்ளனர். இந்த மரபின்முதல் அரசன் கோக்கண்டன் ஆவான். இவனுடைய மகனும் தென்கொங்குப்பகுதியை சிறப்பாக ஆட்சி செய்தவனுமான கோக்கண்டன் ரவியின் பெயரில் இவ்வூர் இரவிமங்கலம் என அழைக்கப்படுகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இரவிமங்கலத்தில் உள்ள ரவிமங்கல ஈஸ்வரர் கோவில்வளாகத்தில்ஆய்வு மேற்கொண்டபோது கொங்கு மண்டல வரலாற்றில் ஒர் தனிச்சிறப்பாக
வட்டெழுத்துக்களுடன் கூடிய நடுகல் ஒன்றைக் கண்டறியப்பட்டது. இந்த நடுகல் 130செ.மீ. உயரமும், 75 செ.மீ. அகலமும் கொண்டது. இந்த வீரக்கல்லில் உள்ள இருமாவீரர்களும் தங்கள் இடது கையில் வில் ஏந்திய படியும், வலது கையில்ஓங்கிய குறுவாளுடனும் போருக்கு செல்லும் நிலையில்வடிவமைத்துள்ளனர். மாவீரர்களின்அள்ளி முடிந்த குடுமி நேராகவும், காதில்குண்டலமும் மார்பில் அணிகலன்களும் இடையில் மட்டும் ஆடை அணிந்துள்ளனர். வீரர்களுக்கு இடையே அவர்களுடைய நாயும்
காட்டப்பட்டுள்ளது.
வட்டெழுத்து என்பது தமிழ் எழுத்துக்களுக்கு முன்பு கி.பி. 4 -ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 11- ஆம்
நூற்றாண்டு வரை இங்கு வழக்கில் இருந்த தமிழ் எழுத்து வடிவமாகும். இந்தநடுகல்லில் மேலே மூன்று வரிகளிலும் வலது பக்கவாட்டில் ஆறு வரிகளிலும் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு எழுத்து அமைப்பில் வட்டெழுத்து கல்வெட்டுபொறிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் பெருஞ்செல்வமாக விளங்கி வரும்கால்நடைகளை ரவி மங்கலத்தில் இருந்து எதிரி வீரர்கள் கவர்ந்து செல்லும்போது இவ்வுரைச் சேர்ந்த இரு வீரர்கள் அம்மாட்டு மந்தையைக்காப்பாற்ற எதிரிவீர் உடன் போரிட்டு மாண்ட மறத்தமிழர்களின் நினைவாக ரவிமங்கல ஊர் மக்கள் இந்நடுகல்லை எடுத்து அதற்கு பூச்சூட்டிப்படையலிட்டு வழிபட்டுள்ளனர்.
பக்கவாட்டில் உள்ளவட்டெழுத்துக்கள் மூலம் இம்மாவீரர்களுடன் இணைந்து போராடி வீர மரணம்
எய்திய நாயின் வீரம் செறிந்த தியாகத்தையும், அன்றே நன்றி மறவாமல் பதிவுசெய்துள்ளதையும் நாம் அறிய முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.