திருமங்கலத்தில் 110 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருமங்கலத்தில் 110 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-14 19:30 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் நகராட்சியில் பிளாஸ்டிக் கப்புகள், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதனையும் மீறி ஆங்காங்கே பிளாஸ்டிக் பயன்பாடுகள் இருப்பதாக தொடர்ந்து நகராட்சிக்கு புகார் வந்தது. இந்தநிலையில் திருமங்கலம் முகமதுஷாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் சண்முகவேலு, சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ராஜலட்சுமி, யமுனா அடங்கிய குழுவினர் நேற்று காலை அப்பகுதிக்கு சென்றனர்.

அங்குள்ள வீடுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுப்பது போல் வீடு வீடாக சென்று துப்புரவு பணியாளா்கள் கணக்கெடுத்தபடியே சோதனை நடத்தினர். அதில் ஒரு வீட்டில் அதிகளவில் பிளாஸ்டிக் கப்புகள் இருந்தது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் அந்த வீட்டிற்குள் சென்று பதுக்கிவைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்தனர். அந்த வீட்டில் விசாரணை நடத்திய போது திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளின் கடைகளுக்கு டீ கப்பாக இந்த பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்த நகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளில் வைத்திருந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் 110 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்