திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 11 ரெயில்கள் இன்று ரத்து
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியில் இருந்து செல்லும், புறப்படும் 11 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியில் இருந்து செல்லும், புறப்படும் 11 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தண்டவாள பராமரிப்பு
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மதுரை மார்க்க தண்டவாளத்திலும், சென்னை மார்க்கத்தில் பொன்மலை பகுதியிலும் தண்டவாள பராமரிப்பு பணிகள் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பராமரிப்பு பணிகளால் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயில்களும், இங்கிருந்து செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. திருச்சியில் இருந்து காலை 7 மணிக்கு ஈரோடுக்கு இயக்கப்படும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நேற்று முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
ரெயில்கள் தாமதம்
திருச்சியில் இருந்து காலை 8.35 மணிக்கு தஞ்சைக்கு புறப்படும் ரெயில், காலை 9.45 மணிக்கு திருச்சியில் இருந்து கரூர் செல்லும் ரெயில், தஞ்சையில் இருந்து மயிலாடுதுறைக்கு காலை 10.05 மணிக்கு செல்லும் ரெயில், கரூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் ரெயில், மயிலாடுதுறையில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்படும் விழுப்புரம் ரெயிலும் நேற்று ரத்து செய்யப்பட்டது.
திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் புறப்படும் இன்டர்சிட்டி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக காலை 7.20 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் நேற்று இந்த ரெயில் 2 மணி 40 நிமிடம் தாமதமாக காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்றது. திருச்சியில் இருந்து இரவு 10.50 மணிக்கு சென்னை எழும்பூர் புறப்பட்டு செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் பொன்மலை ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.54 மணிக்கு புறப்பட்டு சென்றது.
பயணிகள் அவதி
மேலும் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி வழியாக சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு சென்ற பாண்டியன், பொதிகை, அந்தியோதையா, நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி உள்ளிட்ட பல ரெயில்கள் 3½ மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை தாமதமாக சென்றடைந்தன. இதனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து பணிக்கு குறித்த நேரத்துக்கு செல்லமுடியாமல் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்தநிலையில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக திருச்சி-ராமேசுவரம் ரெயில் (எண்:16849), திருச்சி-ஈரோடு ரெயில் (எண்:06611), திருச்சி-தஞ்சாவூர் (எண்:06870), தஞ்சாவூர் மயிலாடுதுறை (எண்:06874), மயிலாடுதுறை-விழுப்புரம் (எண்:06694), திருச்சி-காரைக்கால் (எண்:06490), திருச்சி-கரூர் (எண்:06881), கரூர்-திருச்சி (எண்:06882), திருச்சி-கரூர் (எண்:06123), கரூர்-திருச்சி (எண்:06124) ஆகிய 10 ரெயில்கள் இன்று இயங்காது. இதுபோல் வேளாங்கண்ணியில் இருந்து இன்று வாஸ்கோடகாமா செல்லவேண்டிய ரெயிலும் (எண்:17316) இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.