11 டன் ரேஷன் அரிசி- 2 வேன்கள் பறிமுதல்

11 டன் ரேஷன் அரிசி 2 வேன்களுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-22 18:57 GMT


விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் போலீசாருடன் வெம்பக்கோட்டை பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது செவல்பட்டி- ஆலங்குளம் மெயின் ரோட்டில் வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் தலா 50 கிலோ கொண்ட 40 மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. வேனுடன் ரேஷன்அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து வேன் டிரைவர் ஆலங்குளம் தட்டாவூரணியை சேர்ந்த பாண்டித்துரை (வயது 28), கோவில்பட்டி வெள்ளிச்சேரியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மணிமுருகன் (23) ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை செய்த போது சுண்டங்குளம் செவலங்காடு காட்டுபகுதியில் 40 ஏக்கர் நிலத்தில் ரேஷன்அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அந்த பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு காட்டுப்பகுதியில் கீழே தார்ப்பாயை விரித்து 154 மூடைகளில் 7.7 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து அந்த ரேஷன் அரிசி மூடைகளையும் பறிமுதல் செய்து விருதுநகர் நுகர்பொருள் வாணிபகிட்டங்கியில் ஒப்படைத்தனர்.இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து பாண்டித்துரையையும், மணி முருகனையும் கைது செய்தனர். அதேபோல வத்திராயிருப்பு கூமாபட்டி சாலையில் காட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த வேனை சோதனை செய்த போது அந்த வேனில் தலா 40 கிலோ கொண்ட 30 மூடைகளில் 1.2 டன் ரேஷன் அரிசி இருந்தது. வேனுடன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார், வேன் டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டிய புரத்தைசேர்ந்த சிவா (29), அரிசி உரிமையாளர் சங்கரன்கோவில் தாலுகா இருமன்குளத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (35) ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேன் டிரைவர் சிவாவிடம் விசாரணை நடத்திய போது அவரது மனைவி கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரேஷன் அரிசி மூடைகளை கடத்தும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்