11 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
அரசு பஸ்சில் பெண் தவற விட்ட 11 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு;
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை அடுத்த பாம்பன்விளையைச் சேர்ந்தவர் பவானி (வயது 65). இவர் நேற்று நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கடியப்பட்டணம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் பாம்பன்விளைக்கு பயணம் செய்தார். அப்போது அவர் தன்னுடைய கைப்பையில் 11 பவுன் தங்கச் சங்கிலி, செல்போன் மற்றும் 2 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை வைத்திருந்தார். அந்த கைப்பையை தவறவிட்டதாக கூறப்படுகிறது. பஸ்சைவிட்டு இறங்கியதும் கைப்பை காணாமல் போனது கண்டு பவானி பதறினார். உடனே அவர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்து அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் தனது நகை, பணம், செல்போன் இருந்த கைப்பை பறிபோனதாக கூறி கதறி அழுதார்.
உடனடியாக அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு அவர் பயணம் செய்த தடம் எண் 14 எப் என்ற பஸ் என்பதை கண்டறிந்து, அந்த பஸ்சின் டிரைவர் குமார், கண்டக்டர் சிவக்குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பவானி தவறவிட்ட தங்கச் சங்கிலி உள்ளிட்டவற்றை மீட்டு பவானியிடம் ஒப்படைத்தனர். அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். நகையை ஒப்படைக்கும் நிகழ்ச்சியின்போது அரசு போக்குவரத்துக்கழக அண்ணா பஸ் நிலைய மேலாளர் செல்வராம், கிளை மேலாளர் வேல்முருகன், டிரைவர் குமார், கண்டக்டர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.