ஓய்வுபெற்ற பெண் சத்துணவு ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற பெண் சத்துணவு ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு போனது.

Update: 2022-07-29 19:35 GMT

பெரம்பலூர்-துறையூர் சாலையில் தெப்பக்குளம் எதிரே உள்ள காந்தி நகரை சேர்ந்த ராஜூவின் மனைவி லெட்சுமி(வயது 60). ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியரான இவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தற்போது நான் மண்பாண்ட பொருட்கள் மற்றும் மூங்கில் பொருட்கள் விற்பனை செய்து வருகிறேன். மேலும் என்னுடன் எனது சித்தி ஜெயா(80) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 26-ந்தேதி மாலையில் எனது வீட்டிற்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், என்னிடம் ரூ.500-ஐ கொடுத்து மண்பாண்டம், மூங்கில் பொருட்களை வாங்கிக்கொண்டார். பின்னர் அவர் என்னிடம், சத்துணவு அதிகாரி அருகே உள்ள பள்ளியில் இருப்பதாகவும், அவர் எங்களை போன்ற ஆட்களுக்கு பணம் தருவதாகவும், அதனால் என்னை உடனடியாக அங்கு செல்லுமாறும், அவர் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு பின்னால் வருவதாகவும், கூறினார். அதனை நம்பி நானும் பள்ளிக்கு சென்றேன். ஆனால் அங்கு யாரும் இல்லை. பின்னர் நான் வீட்டிற்கு வந்தபோது அந்த பெண்ணும் இல்லை. மேலும் வீட்டில் இருந்த 11 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தன. அந்த பெண் தான் நகையை திருடிச் சென்றிருக்க வேண்டும்.எனவே அந்த பெண் மீது நடவடிக்கை எடுத்து, எனது நகையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பவுன் நகையை திருடிச்சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பெண் லெட்சுமி வீட்டிற்கு வந்து, பின்னர் காரில் ஏறிச்சென்ற காட்சிகள் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்