பஸ் கவிழ்ந்து 3 பெண்கள் உள்பட 11 பேர் காயம்

பஸ் கவிழ்ந்து 3 பெண்கள் உள்பட 11 பேர் காயம்

Update: 2022-12-05 19:27 GMT

தஞ்சை அருகே பஸ் கவிழ்ந்து 3 பெண்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பஸ் கவிழ்ந்தது

திருச்செந்தூரில் இருந்து கும்பகோணத்திற்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்த பாலமுருகன்(வயது 40) டிரைவராகவும், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த‌ சிவக்குமார் (‌38) கண்டக்டராகவும் பணிபுரிந்தனர். இந்த பஸ்சை இருவரும் மாறி, மாறி ஓட்டி வந்தனர். நேற்று அதிகாலை சிவக்குமார் பஸ்சை ஓட்டிவந்தார். தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள அற்புதாபுரம் சோதனைச்சாவடி அருகில் பஸ் வந்தபோது லாரி ஒன்று சாலையை கடந்தது. அப்போது லாரியில் மோதாமல் இருப்பதற்காக சிவக்குமார் திடீரென பிரேக் போட்டார். இதில் பஸ் நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

11 பேர் காயம்

இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இதனை பார்த்ததும் அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பஸ்சின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், மணிமாறன், தஞ்சையை சேர்ந்த வெங்கடேஷ், பிருத்திகா, கும்பகோணத்தை சேர்ந்த மாலா, சாந்தி, மணிராஜ் உள்ளிட்ட 11 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

டிரைவர் மீது வழக்கு

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக வல்லம் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்தில் கவிழ்ந்த அரசு பஸ் மீட்கப்பட்டு வல்லம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து வல்லம் போலீசார் பஸ்சை ஓட்டி வந்த சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்