பள்ளி ஆசிரியரிடம் ரூ.11¾ லட்சம் மோசடி
கோவையில் ஆன்லைனில் பகுதிநேர வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி பள்ளி ஆசிரியரிடம் ரூ.11¾ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை
கோவையில் ஆன்லைனில் பகுதிநேர வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி பள்ளி ஆசிரியரிடம் ரூ.11¾ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி ஆசிரியர்
கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 46). இவர், ஏர்போர்ஸ் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது டெலிகிராம் செயலிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் தாங்கள் கூறும் பணிகளை செய்து முடித்தால் அதிகளவு கமிஷன் தொகை கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஜெயபிரகாஷ் அதில் உள்ள லிங்கை அழுத்தி தனது விவரங்களை பதிவு செய்தார். இதையடுத்து ஜெயபிரகாசை செல்போனில்் ஒருவர் தொடர்பு கொண்டார். தாங்கள் கொடுக்கும் பணிகளை ஓய்வு நேரத்தில் செய்து கொடுத்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் அனுப்பி வைத்த யூடியூப் சேனல்களுக்கு ரிவியூ கொடுத்தார். இதில் அவருக்கு ஓரளவு வருமானம் கிடைத்தது.
கூடுதல் கமிஷன்
இதனை தொடர்ந்து மீண்டும் ஜெயபிரகாசை தொடர்பு கொண்ட நபர் இனி ஆன்லைன் மூலம் கொடுக்கப்படும் பணிகளுக்கு பணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்து முடிக்கப்படும் பணிகளுக்கு கூடுதல் கமிஷன் கிடைக்கும் என்று தெரிவித்தார். இதனை நம்பிய அவர் முதலில் சிறிய தொகையை செலுத்தி ஆன்லைன் வேலைகளை செய்து முடித்தார். இதற்கு அவருக்கு ஓரளவு கமிஷன் தொகை கிடைத்தது. இதனால் நம்பிக்கை அடைந்த அவர் பல்வேறு கட்டங்களாக அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.11 லட்சத்து 73 ஆயிரம் செலுத்தினார்.ஆனால் ஜெயபிரகாசிற்கு எவ்வித லாப தொகையும் கிடைக்கவில்லை. மேலும் அந்த மர்மநபரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.