10-ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரம்கிராம மக்கள் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-22 07:56 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுவாடா கிராமத்தை சேர்ந்த விவசாயி ரகுவின் மகள் ராகவி (வயது 15). இவர் கண்ணன்கோட்டை கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 18-ந்தேதி மாணவி ராகவி பள்ளிக்கு சென்று வந்த நிலையில், மறுநாள் (புதன்கிழமை) வீட்டில் யாரும் இல்லாத போது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாதிரிவேடு போலீசார், மாணவி ராகவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வத்தனர். பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் உறவினர்களிடம் மாணவி ராகவியின் உடல் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கண்ணன்கோட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளிக்கு கடந்த 18-ந்தேதி மாணவி ராகவி பள்ளியில் சிறப்பு வகுப்பில் இருந்தபோது வாலிபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து ஆபசமாக பேசி காதலிப்பதாக கூறியதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் கூறி மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் சிறுவாடா கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கண்ணன்கோட்டையில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளி எதிரே சாலையில் அமர்ந்து திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் தற்கொலைக்கு காரணமானவரை பள்ளி நிர்வாகம் கண்டிக்கவில்லை என்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் புகார் கூறினர். மேலும் மற்ற பெற்றோர்கள் பள்ளியில் இருந்து மாணவிகளுக்கு மாற்று சான்றிதழ் வழங்கும்படி வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்வி அதிகாரி வர வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து பொன்னேரி மாவட்ட கல்வி அதிகாரி வைலட் மேரி ஈஸ்சபெல்லா நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளை அழைத்து போலீசாரின் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர்கள் கூறுவது போல மாணவி ராகவி விஷயத்தில் எந்த ஒரு சம்பவமும் பள்ளி வளாகத்தில் நடைபெறவில்லை என அவர் திட்டவட்டமாக மறுத்தார். பள்ளியில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்த அவர், மற்ற பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் மாற்று சான்றிதழை பெறுவதாக கூறம் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

பிரச்சினைக்கு என்ன காரணம் என என்பதை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும், மாணவியின் தற்கொலைக்கு யார் காரணமாக இருந்தாலும் முழுமையான விசாரணைக்கு பிறகு முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் பள்ளி வாசலில் பள்ளி தொடங்கும் போதும், முடியும் போதும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தங்களது 6 மணி நேர சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்