10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
நாகர்கோவிலில் டியூசனுக்கு போக சொல்லி தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் டியூசனுக்கு போக சொல்லி தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
10-ம் வகுப்பு மாணவர்
நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி. காலனியை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி பானு. இவர்களுக்கு மது பிரசாத் (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். பத்மநாபன் தஞ்சாவூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி வேலை பார்த்து வருகிறார். மது பிரசாத் நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் பள்ளி முடிந்ததும் மது பிரசாத்தை டியூசனுக்கு செல்லுமாறு அவருடைய தாயார் கூறியதாக தெரிகிறது. ஆனால் மது பிரசாத் டியூசனுக்கு செல்ல மறுத்துள்ளார். இதனால் தாயார் தொடர்ந்து கண்டித்ததால் மது பிரசாத் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று முன்தினம் இரவு மது பிரசாத் வழக்கம்போல இரவு தூங்க சென்றார். ஆனால் நேற்று அதிகாலையில் அவர் படுக்கை அறையை விட்டு வெளியே வரவில்லை. உடனே பானு அறை கதவை திறந்து சென்று பார்த்தார். அப்போது மது பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பானு கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
பின்னர் இதுபற்றி கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய மது பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.