ராயக்கோட்டையில் அரசு விடுதியில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ராயக்கோட்டை அரசு விடுதியில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தங்கி இருந்த அறையில் உருக்கமான கடிதம் சிக்கியது.

Update: 2022-12-09 19:00 GMT

ராயக்கோட்டை:

பள்ளி மாணவர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35), பெயிண்டர். இவருடைய மனைவி தீபா. இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடடார். இவர்களின் மகன்கள் குருபிரகாஷ் (15). மனோ (14).

ரமேஷ் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அத்திமூட்லு கிராமத்தில் வசித்து வருகிறார். மகன்கள் குருபிரகாஷ், மனோ ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முறையே 10-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். மேலும் அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

குருபிரகாஷ், தனது தாயார் இறந்தது முதல் அவரது நினைவாகவே இருந்து வந்தார். மேலும் வார விடுமுறை நாட்களில் அத்திமூட்லு கிராமத்திற்கு சென்று வந்தார். கடந்த 10 நாட்களாக விடுமுறையில் அவர் வீட்டிற்கு செல்லவில்லை.

பள்ளிக்கு செல்லவில்லை

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக குருபிரகாஷ் பள்ளிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்து வந்தார். அவருடன் தங்கி படித்து வரும் மாணவர் ஒருவர் எதற்காக பள்ளிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருக்கிறாய் என கேட்டார்.

நேற்று முன்தினம் இரவு விடுதியில் மாணவர்கள் அனைவரும் இருந்தனர். அந்த நேரம் தான் தனியாக படிக்க போவதாக கூறி குருபிரகாஷ் விடுதியில் உள்ள ஒரு அறைக்கு சென்றார்.

மற்ற மாணவர்கள் விடுதியில் இருந்த மற்ற அறைகளில் தூங்கினார்கள். நேற்று காலை குருபிரகாஷ் தங்கி இருந்த அறையின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டு இருந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை

நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் அந்த அறையின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு இருந்த மின்விசிறியில் படுக்கை விரிப்பால் தூக்குப்போட்டு மாணவர் குருபிரகாஷ் தற்கொலை செய்திருந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் இது குறித்து விடுதி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவம் தொடர்பாக ராயக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு புகார் செய்தனர். அதன்பேரில் கலால் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

போலீசார் விசாரணை

அவர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் கனகராஜ், தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணகுமார் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள்.

மாணவர் தங்கி இருந்த அறையில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதை போலீசார் கைப்பற்றினார்கள். மாணவர் தற்கொலை தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராயக்கோட்டையில் அரசு விடுதியில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்