10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்

நாகர்கோவிலில் சிறுமியை தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-04-23 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் சிறுமியை தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிறுமி பலாத்காரம்

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (வயது 24), கட்டிட தொழிலாளி. இவர் பள்ளி மாணவிகளிடம் நட்பாக பேசி காதல் வலை வீசுவதும், தன்னை காதலிக்கும் சிறுமிகளிடம் நெருக்கமாக இருந்துவிட்டு பின்னர் அவர்களை கழற்றி விடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு சிறுமியை காதலிப்பது போல் நடித்து நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அதோடு தன் நண்பர்கள் 2 பேருக்கும் சிறுமியை விருந்தாக்கி இருக்கிறார். இதுதொடர்பாக விக்னேஷ் உள்பட 3 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு விக்னேஷை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்ததும் தலைமறைவானார். மேலும் விக்னேஷ் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் அடி-தடி வழக்கு, கஞ்சா வழக்கு, கருங்கல் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்பட 4 வழக்குகள் உள்ளன.

மாணவியையும் சீரழித்தார்

இதற்கிடையே விக்னேசுக்கு 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். தொடர்ந்து மாணவியை தன்னுடைய வலையில் வீழ்த்தியதும் அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மாணவி வீட்டுக்கு வராததால் அவரை விக்னேஷ் கடத்திச் சென்றதாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் 2 நாட்களுக்கு பிறகு மாணவி வீட்டுக்கு வந்தார். அப்போது விக்னேஷ் தன்னை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் கூறி கதறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீசில் மீண்டும் புகார் கொடுத்தனர். இதனையடுத்து கடத்தல் வழக்கை போக்சோ வழக்காக போலீசார் மாற்றினர்.

வாலிபர் தலைமறைவு

தற்போது விக்னேஷ் மீது 2-வது முறையாக போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அவர் போலீசாரிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். எனவே அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள விக்னேஷ் இதே போன்று சில மாணவிகளை காதலிப்பதாக கூறி அவர்களுடன் சுற்றித்திரிந்துள்ளார். எனவே அவரை கைது செய்து விசாரணை நடத்தினால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்