10-ம் வகுப்பு மாணவி கிணற்றில் பிணமாக மிதந்ததால் பரபரப்பு

செய்யாறு அருகே 10-ம் வகுப்பு மாணவி கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-08-22 18:45 GMT

செய்யாறு 

செய்யாறு அருகே 10-ம் வகுப்பு மாணவி கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

10-ம் வகுப்பு மாணவி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழ்மட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 41). ஆட்டோ டிரைவர். இவரது மகள் நிக்கிதா (15). திருவோத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கழிப்பறைக்காக அருகே உள்ள பகுதிக்கு சென்ற நிக்கிதா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து வேலு மற்றும் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினருடன் தேடியபோது கீழ்மட்டை ஏரியில் உள்ள குடிநீர் கிணற்றின் அருகே நிக்கிதாவின் காலணி இருந்தது.

பிணமாக மீட்பு

தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து கிணற்றில் தேடியபோது நிக்கிதா பிணமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து தந்தை வேலு அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவி நிக்கிதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

10-ம் வகுப்பு மாணவி கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்