10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
சென்னை,
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இன்று தொடங்கி, வருகிற ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. முதல் நாளான இன்று, தமிழ் மற்றும் இதர மொழிப்பாட தேர்வுகள் நடக்க இருக்கிறது. அதே போல் புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த, 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுகிறார்கள். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெறுகிறது.
தேர்வு அறைகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, 48 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக ஈடுபடுகிறார்கள். மேலும், 3 ஆயிரத்து 350 பறக்கும் படைகளும், ஆயிரத்து 241 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வறைக்குள் செல்போன் உள்பட மின்சாதன பொருட்கள் கொண்டுவர ஆசிரியர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு மையங்களுக்கு வருகை தந்து தேர்வு எழுதி வருகின்றனர்.