10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு

குடியாத்தம் அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-12 18:28 GMT

குடியாத்தம் அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நடுகற்கள்

குடியாத்தம் அருகே உள்ள செண்டாத்தூர் என்ற கிராமத்தில் கால்வாய் ஓரம் நடுகற்கள் இருப்பதாக வரலாற்ற ஆர்வலர்கள் சரவணராஜா, நரசிம்மன் ஆகியோருக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அந்த கிராமத்துக்கு சென்று நடுகற்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த கற்கள் 10-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

உடலில் 8 அம்புகள்

இங்கு 2 நடுகற்கள் உள்ளன. அதில் கால்வாயை ஒட்டியவாறு உள்ள நடுகல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த கல் சுமார் 8 அடி உயரமும் 4 அடி அகலத்தில் உள்ள பலகைக் கல்லில் புடைப்பு சிற்பமாக, நேர்கொண்ட பார்வையில் உள்ளதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள வீரர் வலது கையில் வாளினை ஏந்தியும், இடது கையில் வில்லையும் ஏந்தியுள்ளார். இடுப்பில் அரை ஆடையுடன் உறையில் குத்துவாளும் உள்ளது. வீரர் தலையில் கொண்டையிட்டு, வீரக்கழல் அணிந்துள்ளார். அவர் எவ்வாறு இறந்தார் என்பதை காட்ட அவர் உடம்பில் வரிசையாக 8 அம்புகள் பாய்ந்துள்ளதும், அந்த வீரன் மேல்பகுதியில் கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. காலின் அருகே இருபுறமும் மண்கலங்களும், குத்துவிளக்கும் உள்ளன. இந்த கல்லில் 932-வது ஆண்டில் செதுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாட்டினை கவர்ந்து...

இப்பகுதியை ஆட்சி செய்த மாவலி வானவராயர் என்பவரது ஆட்சியின் போது தண்டிக் காமனார் என்பவர் எதிரிகள் மாட்டினை கவர்ந்து கொண்டு போகவிடாமல் இருக்க தனது உயிரை துறந்து மீட்டுள்ளார். அவருக்காக தான் இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.

இதன் பக்கத்தில் மற்றொரு நடுகல் உள்ளது. அதில் வீரர் வலது கையில் குத்து வாளும், இடக்கையில் வில்லேந்தி உள்ளார். இரு அம்புகள் உடலில் துளைத்து காட்டப்பட்டுள்ளது. அதில் உள்ள எழுத்துகள் அழிந்து போய் உள்ளது. அவரும் தனது உயிரை போரில் துறந்துள்ளார் என்பதை நடுகல் உணர்த்துகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்