திண்டுக்கல்லில் 10-வது புத்தக திருவிழா; இன்று தொடக்கம்

திண்டுக்கல்லில் இன்று 10-வது புத்தக திருவிழா தொடங்குகிறது. இதனை முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு இன்று தொடங்கி வைக்கிறார்.

Update: 2023-10-04 19:19 GMT

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் 10-வது புத்தக திருவிழா, திண்டுக்கல் டட்லி பள்ளி மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பள்ளி மைதானத்தில் 130 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஆன்மிகம், இலக்கியம், கவிதை உள்பட சுமார் 6 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை பார்வையிட அனுமதி இலவசம் ஆகும்.

தினமும் மாலை 3 மணிக்கு உலக அளவில் சிறந்த திரைப்படங்கள் 9 நாட்களும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இயக்குனர்களின் குறும்படங்கள் ஒருநாளும் திரையிடப்படுகின்றன. மேலும் பள்ளி மாணவர்களுக்கு உண்டியல், டோக்கன் வழங்கப்பட்டு சுமார் ரூ.75 லட்சத்துக்கு புத்தகம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்குகிறார். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகையதீன் வரவேற்று பேசுகிறார். திண்டுக்கல் இலக்கிய களத்தின் தலைவர் மனோகரன் புத்தக திருவிழா பற்றி பேசுகிறார். தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பேசுகிறார். பொதுநூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் முதல் விற்பனையை தொடங்கி வைக்க, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அதை பெற்று கொள்கிறார். இந்த புத்தக திருவிழாவில் 'தினத்தந்தி' பதிப்பகத்தின் அரங்கு உள்ளது. அதில் 'தினத்தந்தி' பதிப்பகத்தின் புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்