வைகாசி விசாகத்தையொட்டி வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் 108 பால்குட ஊர்வலம்
வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் 108 பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
வடபழனி முருகன் கோவில்
சென்னை வடபழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி விசாகமான நேற்று அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு முருகபெருமானுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.
காலை 9 மணி அளவில் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் வீதி உலா நடந்தது. காலை 10 மணிக்கு தெப்பக்குளக்கரையில் தீர்த்தவாரி மற்றும் கலாசாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
108 பால்குட ஊர்வலம்
பின்னர் வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வடபழனி முருகன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் முருக பெருமானுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது.
பால்குட ஊர்வலத்தில் வந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். காலையில் முருகபெருமான் ராஜ அலங்காரத்திலும், பகல் பொழுதில் வேதியர் அலங்காரத்திலும், மாலை சந்தன காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை 6 மணி அளவில் திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து மயில்வாகனத்தில் சாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் காலையில் இருந்தே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஆதிமூலம், கோவில் துணை கமிஷனர் முல்லை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
குன்றத்தூர் முருகன் கோவில்
இதேபோன்று பாரிமுனையில் உள்ள கந்தசாமி கோவில், குன்றத்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், தேனாம்பேட்டையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில், கொசப்பேட்டையில் உள்ள முருகன் கோவில், பெசன்ட் நகரில் உள்ள அறுபடையப்பன் கோவில், குரோம்பேட்டை குமரக்குன்றம் கோவில், சோழிங்கநல்லூரில் உள்ள முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்கள் மற்றும் அனைத்து சிவாலயங்களில் உள்ள முருகப்பெருமான் சன்னிதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.