108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும்

செருவாவிடுதியை மையமாக கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-04-10 18:45 GMT

திருச்சிற்றம்பலம்:

108 ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றி வருகிறது. விபத்துக்கள் உள்ளிட்ட அவசர கால தருணங்களில் இதன் சேவை இன்றியமையாததாக உள்ளது. இதன் சேவை மூலம் நாடு முழுவதும் தினமும் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதியில் தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தின் மூலம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் தினமும் மருத்துவ உதவிகள் பெற்று வருகின்றனர். விபத்துக்கள் ஏற்படும் நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதற்கு பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளில் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திக்கொள்ளும் நிலை உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு சற்று கால தாமதம் ஏற்படுகிறது. எனவே செருவாவிடுதியை மையமாக கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை புதிதாக தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்