தமிழகத்தின் அடையாளமாக 108 ஆம்புலன்சு திட்டம் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இலவச ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை 1 கோடியே 46 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Update: 2023-04-16 16:53 GMT

மதுரை,

தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு, மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

கடந்த 2008-ம் ஆண்டு 200 வாகனங்களுடன் தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்சு திட்டத்தில் தற்போது 1,353 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 205 வாகனங்கள் மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் கருவிகளுடன் அமைந்து உள்ளன. மீதம் உள்ளவற்றில் 65 ஆம்புலன்சுகள் குழந்தைகளுக்கானவை.

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் 293 ஆம்புலன்சுகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.102 கோடியே 28 லட்சத்து 37 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய அடையாளமாக 108 ஆம்புலன்ஸ் திட்டம் உள்ளது. இதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. அவசர தொலைபேசி எண் 108-க்கு தினமும் 12 ஆயிரத்து 500 அழைப்புகள் வருகின்றன.

இலவச ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை 1 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 266 பேர் பயன் அடைந்துள்ளனர். கொரோனா கால கட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 542 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது கிட்டத்தட்ட 6 லட்சத்து 30 ஆயிரத்து 500 பேர் வரை ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தனர். இதற்காக 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்