திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஒரே நாளில் 101 ஜோடிகளுக்கு திருமணம்

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஒரே நாளில் 101 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

Update: 2023-09-17 18:45 GMT

நெல்லிக்குப்பம், 

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. தேவநாதசாமி கோவிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டிக் கொள்பவர்கள் தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் கோவிலுக்கு வந்து திருமணம் செய்து கொள்வார்கள்.

அந்த வகையில் நேற்று ஆவணி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால், அதிகாலை 4 மணி முதல் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற தொடங்கியது. திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றதை காண முடிந்தது.

இந்த திருமணங்களுக்கு மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வாகனங்களில் குவிந்தனர். இதனால் கோவில் பகுதி சாலைகளில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலைகளில் கூட்டம் அலைமோதியது. திருமணங்களுக்கு வந்தவர்கள் தேவநாதசாமி மற்றும் மலை மீது அமைந்துள்ள ஹயக்கிரீவர் சாமிகளை தரிசனம் செய்தனர். நேற்று மட்டும் கோவில் திருமண மண்டபத்தில் 76 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 25 திருமணங்களும் என 101 திருமணங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். ஒரே நாளில் 100 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதால் கடலூர் - பாலூர் சாலையில் நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்