தி.மு.க. ஆட்சி நீடிக்கக்கூடாது: 2026-ல் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி: ராமதாஸ்
ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம், அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் நடைப்பெறும் வரும் பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், "தமிழகத்தில் இனி தி.மு.க. ஆட்சி நீடிக்கக்கூடாது. 2026-ல் தமிழகத்தில் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி பா.ம.க. தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் பா.ம.க.வுக்கு தனிச்சிறப்பு உள்ளது" என்று அவர் கூறினார்.
மேலும் தமிழகத்தில் 3 முறை உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணத்தை உடனடியாக தர வேண்டும் என்றும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தல், மதுக்கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் பா.ம.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக புதுச்சேரியில் பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்று வருகிறது, இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கவுரவ தலைவர் ஜி.கே மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்து ராமதாஸ் கேட்டறிந்து வந்தார்.
இந்த நிலையில் பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் செய்யப்படுவதாக ராமதாஸ் அறிவித்த நிலையில் அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்,
இதுதொடர்பாக பேசிய அன்புமணி, "வேண்டாம். கட்சியில் 4 மாதத்துக்கு முன்னாடி வந்திருக்கிறார். இளைஞர் அணித் தலைவர் பதவி என்றால், அவனுக்கு என்ன அனுபவம் இருக்கிறது. நல்ல திறமையான அனுபவசாலியை நியமிங்க... குடும்பத்தில் இருந்து இன்னொன்னா.. குடும்பத்தில் இருந்து...என்ன சொல்றது. (மைக்கை தூக்கிப் போட்டு ஆவேசமடைந்தார்.) சென்னை பனையூரில் எனக்கு புதிதாக ஒரு அலுவலகம் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். அங்கு வந்து என்னை எல்லோரும் பார்க்கலாம். 4446060628 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்" என்று அவர் காட்டமாக தெரிவித்தார்.
இதற்கிடையில் பேசிய ராமதாஸ், "யாராக இருந்தாலும் நான் சொல்வதைதான் கேட்க வேண்டும்.. கேட்கவில்லை என்றால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது, இது நான் உண்டாக்கிய கட்சி, மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் அணித் தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார். எல்லோரும் கைத்தட்டுங்கப்பா... இன்னொரு அலுவலகம் திறந்துக்க. பரசுராமன் முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப் போகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லைனா.. அவ்வளவுதான்... வேறு என்னா சொல்ல முடியும். முகுந்தன்தான் தலைவர். நான் சொல்வதுதான். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் என் பேச்சை கேட்காதவர்கள் விலகிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
யார் இந்த முகுந்தன்?
பா.ம.க. கட்சியின் இளைஞர் அணி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள முகுந்தன், டாக்டர் ராமதாசின் மூத்த மகள் காந்திமதியின் மகன். தனது பேரனை ராமதாஸ் இளைஞர் அணி தலைவராக அறிவித்தார், இருப்பினும் ராமதாஸ் முகுந்தனை மேடைக்கு அழைத்தும் முகுந்தன் மேடைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில், நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது, அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.