மோகனூர்
மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் பிரசித்தி பெற்ற பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி 1,008 பால்குடம் ஊர்வலம் நடந்தது. விழாவையொட்டி காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள், விநாயகர் வழிபாடு செய்தனர். தொடர்ந்து பால்குடங்களை எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். இதையடுத்து மூலவர் செல்லாண்டியம்மனுக்கு 1,008 பால்குடம் அபிஷேகம் நடந்தது. அதையடுத்து பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.