மோகாம்பரி மாரியம்மன் கோவிலுக்கு 1008 பால்குட ஊர்வலம்
விருத்தாசலம் மோகாம்பரி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் 1008 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் அமைந்துள்ள மோகாம்பரி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 21-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து பக்தர்கள் சக்தி கரகத்துடன் 1008 பால்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சாகைவார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செல்லமுத்து மாரியம்மன்
இதேபோல் பெரியகண்டியாங்குப்பம் அய்யனார் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர். சித்தலூர் செல்லமுத்து மாரியம்மன் கோவில் பக்தர்கள் மணிமுக்தாற்றிலிருந்து செடல் குத்தியும், அம்மன் வேடமணிந்தும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.