1,000 மாணவர்கள் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி

வேலூரில் 1,000 மாணவர்கள் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-02-16 16:59 GMT

வேலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ- மாணவிகளிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் தமிழ் கனவு என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி வேலூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் எழுத்தாளர் பவா செல்லதுரை, பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.

வேலூர் ஊரீசு கல்லூரி, முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து 11 கல்லூரிகளை சேர்ந்த ஆயிரம் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கையேடு, தமிழ் பெருமிதம் என்ற கையேடுகள் வழங்கப்பட்டது. சிறந்த கருத்துகளை தெரிவித்த மற்றும் கேள்விகள் எழுப்பிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பல்வேறு அரசுத்துறை சார்ந்த திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்