மாவட்டத்தில் ரூ.1000 கோடிக்கு திட்டப்பணிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1000 கோடிக்கு திட்டப்பணிகள் நடைபெற உள்ளன என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

Update: 2023-06-24 18:45 GMT

சாயல்குடி, 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1000 கோடிக்கு திட்டப்பணிகள் நடைபெற உள்ளன என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

மருத்துவ முகாம்

சாயல்குடி அருகே டி.மாரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம், காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது. முகாமுக்கு ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். மாரியூர் சண்முகவேல் வரவேற்றார்.

பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சாயல்குடி கிழக்கு குலாம்முகைதீன், சாயல்குடி மேற்கு ஜெயபாலன், கடலாடி வடக்கு ஆப்பனூர் ஆறுமுகவேல், முதுகுளத்தூர் கிழக்கு பூபதி மணி, மத்திய கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) இந்திரா குத்துவிளக்கு ஏற்றினார். முகாமை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர்கிராம வளர்ச்சி நல வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.1000 கோடியில் திட்டப்பணிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை சரி செய்ய ரூ.1000 கோடியில் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட உள்ளது. முதுகுளத்தூர் தொகுதி கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் உள்ள கரடு முரடான சாலைகளுக்கு தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வதற்காக வீடு தேடி மருத்துவம் தந்துள்ளார். வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்கின்றனர். அதே மருத்துவம் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக கிராமப் பகுதிகளிலேயே மருத்துவ முகாம்களை அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து பணிமனை

சாயல்குடியில் போக்குவரத்து பணிமனை அமைக்க சட்டமன்ற நிதியில் இருந்து ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பனைத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு நரிப்பையூரில் ரூ.5 கோடியில் பனை பொருட்கள் அங்காடி அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது கடலாடி முதுகுளத்தூர், கமுதி ஆகிய 3 ஒன்றியங்களைப் பிரித்து சிக்கல், சாயல்குடி என 5 ஒன்றியங்களாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கண்ணன், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், சாயல்குடி நீர்பாசன சங்க தலைவர் ராஜாராம், ஒன்றிய கவுன்சிலர்கள் பிச்சை, வசந்தா கதிரேசன், ஊராட்சித்தலைவர்கள் மங்களசாமி, தென்னரசி செல்லபாண்டியன், ராஜேந்திரன், தி.மு.க. ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன், நகர் இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ் ராம், கோகுலம் மருது பாண்டியன், இளைஞரணி மாரிநாதன், கிராம நிர்வாக அலுவலர்கள் மாரிப்பாண்டியன், ராஜேஷ் கண்ணன், வெள்ளைச்சாமி, அனீஸ் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாயல்குடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்