100 யூனிட் இலவச மின்சாரம்: ஆதார் இணைப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது -அமைச்சர் பேட்டி
ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
சென்னை,
நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவது குறித்தும், தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குனர் (மின் தொடரமைப்பு) மணிவண்ணன், இயக்குனர் (பகிர்மானம்) சிவலிங்கராஜன், தலைமை அலுவலக தலைமை என்ஜினீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.
அனைத்து மண்டல தலைமை என்ஜினீயர்கள், மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர்.
100 நாட்களுக்குள் மின் இணைப்பு
ஆய்வின் போது 50 ஆயிரம் விவசாயிகளுக்கு 100 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
மின் இணைப்பு வழங்குவதற்கான தளவாட பொருட்கள் மற்றும் மின்மாற்றிகளை முன்கூட்டியே கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், மின் இணைப்புகள் வழங்குவதற்கு அலுவலர்களோ அல்லது பணியாளர்களோ விவசாயிகளை எந்தவிதத்திலும் இடையூறு செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
அனைத்து பணிகளும் வாரிய செலவிலேயே முடிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். விவசாயிகளை இடையூறு செய்வதாக தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
தொடர்பில் இருக்க வேண்டும்
எதிர்வரும் நாட்களில் கனமழையை எதிர்கொள்ள உரிய தளவாட சாமான்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், மழைக்காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தால் உதாசீனப்படுத்தாது அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சீரான மின் விநியோகம்
கூட்ட முடிவில் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்வரும் நாட்களில் மழை அதிகமாக இருந்தாலும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு சீரான மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை உள்பட எந்த இடங்களிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை. மழையால் மின் பாதிப்பு ஏற்பட்டால் மின்னகத்தை தொடர்பு கொண்டு எந்த இடங்களில் பாதிப்பு என்று புகார் தெரிவிக்க வேண்டும். கனமழை பெய்த சீர்காழியில் 36 மணி நேரத்தில் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டது.
ஆதார் இணைப்பால் பாதிப்பில்லை
அங்கு பழுதடைந்த மின் கம்பங்கள் எல்லாம் மாற்றப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 46 மின்மாற்றிகள் வரை புதிதாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன.
சென்னையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 16 உயர் அழுத்த மின்மாற்றிகளின் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கனமழை பெய்தும் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டது. ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.