சாலையோர கடை வியாபாரிகளிடம் தினமும் ரூ.100 வசூலிக்க வேண்டும்

செய்யாறில் சாலையோர கடை வியாபாரிகளிடம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக தினமும் ரூ.100 வசூலிக்க வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-12-30 10:58 GMT

செய்யாறு

செய்யாறில் சாலையோர கடை வியாபாரிகளிடம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக தினமும் ரூ.100 வசூலிக்க வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகரமன்ற கூட்டம்

செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியின் நகரமன்ற கூட்டம் நடந்தது. நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குல்சார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் வார்டில் உள்ள குறைகளை குறித்து பேசினர்.

அப்போது நகர மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-

கழிவு நீர் கால்வாய் சரியாக பராமரிக்கப்படாமல் கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தி ஆகிறது. குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

குடிநீர் பற்றாக்குறை

குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. 4 நாட்களுக்கு ஒரு முறை என்றும், சில இடங்களில் 7 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. கால்வாய் தூய்மைப்படுத்துதல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். நகராட்சி கூட்டத்திற்கு அலுவலர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்,

நகராட்சி பொறியாளர கூட்டத்திற்கு வரவில்லை. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உறுப்பினர் சவுந்தரராஜன் பேசுகையில், தமிழக அரசு அறிவிப்பின்படி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் அலுவலருக்கு அமைக்கப்பட்டிருந்த மேடையினை அகற்றி அனைவரும் சமம் என்ற அரசின் அறிவிப்பின்படி சமமான இருக்கையில் அமர்ந்து உள்ளார்.

அதன்படி மன்ற கூட்டத்தில் நகரமன்ற தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர் என சமமாக இருக்கை அமைக்க வேண்டும். தற்போதுள்ள தலைவருக்கான உயரமான இருக்கையை அகற்ற வேண்டும் என்றார்.

அதற்கு பதில் அளித்த நகரமன்ற தலைவர், அதற்கான உத்தரவு நகலினை பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ரூ.100 வசூல்

தொடர்ந்து கூட்டத்தில் திருவத்திபுரம் எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை ஓரங்களில் உள்ள தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

இதனால் அக்கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் கிலோ குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனால் அவர்களிடம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக தினமும் ரூ.100 வசூலிக்க வேண்டும்.

மேலும் 25 சதுர அடி வரையிலான கடை ஒன்றுக்கு தினந்தோறும் ரூ.50 திடக்கழிவு மேலாண்மை கட்டணமும், ரூ.50 பயனர் கட்டணம் என ரூ.100 வசூலிக்கவும், 25 சதுர அடிக்கு மேல் உள்ள ஒவ்வொரு 25 சதுர அடிக்கும் ரூ.100 கூடுதல் கட்டணமாக வசூல் செய்தல், திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் உட்புறம் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்க ரூ.43 லட்சத்தில் கட்டிடம் கட்டுதல்,

கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் வேல்சோமசுந்தரம் நகரில் ரூ.46 லட்சத்தில் பூங்கா அமைத்தல், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் புதுத்தெருவில் 45½ லட்சத்தில் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்