மார்ச் மாதம் முதல் 100 நாள் வேலை தொடக்கம்
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் மார்ச் மாதம் முதல் 100 நாள் வேலை தொடங்கப்படும் என்று பேரூராட்சி தலைவர் கூறினார்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் மார்ச் மாதம் முதல் 100 நாள் வேலை தொடங்கப்படும் என்று பேரூராட்சி தலைவர் கூறினார்.
பேரூராட்சி மன்ற கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில், பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன், துணைத்தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதிவரை எழுத்தர் உதயகுமார் மன்ற தீர்மானங்களை படித்தார். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் பின்வருமாறு:-
வித்யா தேவி (இந்தியகம்யூனிஸ்டு):- எனது பகுதியில் சேதம் அடைந்த நிலையில் குடிநீர் குழாய் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும். விழுக்காடு பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சேதம் அடைந்த நிலையில் உள்ள கல்வெட்டை சீரமைத்து தர வேண்டும்.
வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை
ராஜாகார்த்திகேயன் (அ.தி.மு.க.):- நான் பதவியேற்று 14 மாதங்கள் ஆகிவிட்டது. எனது பகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. காட்டுநாயக்கன் தெருவில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைத்து தர வேண்டும். மின்சார துறையிடம் 3 முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
முத்துக்குமார் (பா.ம.க.):- வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் இந்த ஆண்டு மழை காலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமல் தண்ணீர் ஊருக்குள் வரும். எனவே முன்கூட்டியே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது
கென்னடி (தி.மு.க.):- எனது பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. தெருவிளக்கு அமைத்து தர வேண்டும்.
மீனா (அ.தி.மு.க.):- எனது வார்டு பகுதிகளில் தினம் தோறும் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
வளர்ச்சிப்பணிகளை தொடங்க வேண்டும்
பிரியங்கா (அ.தி.மு.க):- எனது வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்கின்றன. இந்த பணியினை துரிதப்படுத்த வேண்டும். வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த திட்ட மதிப்பீட்டினை பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு தர வேண்டும்.
துணைத்தலைவர்:- வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குள் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையான வளர்ச்சி பணிகளை தேர்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும். தேர்தல் தேதி அறிவித்தால் வளர்ச்சி பணிகள் செய்வது தாமதமாகும். இதற்கு உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
100 நாள் வேலை
தலைவர்:- வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் வருகிற மார்ச் மாதம் முதல் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (100 நாள் வேலை) தமிழக அரசு சார்பில் செயல்படுத்த உள்ளது. இதற்கு அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் ஆதரவு தர வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பேசிய தலைவர், உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்றார். கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.