இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது

Update: 2022-09-23 18:45 GMT

விழுப்புரம்

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா குமாரமங்கலத்தை சேர்ந்த 25 வயதுடைய பெண், கடந்த 2019-ம் ஆண்டில் அரசூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து வந்தார். அப்போது அந்த பெண்ணுக்கும், அரசூர் பாரதி நகரை சேர்ந்த தேவராசு மகன் விக்னேஷ் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே காதலாக மாறியது. இருவரும் 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அப்போது விக்னேஷ், அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார். அதன் பிறகு அந்த பெண், விக்னேஷிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதோடு அவருக்கு மிரட்டல் விடுத்தார்.

வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட விக்னேசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட விக்னேஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்