கஞ்சா விற்ற பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை

கஞ்சா விற்ற பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை

Update: 2022-10-26 18:45 GMT

கோவை

கோவையில் கஞ்சா விற்ற பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.

கஞ்சா விற்பனை

கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் இரவு நேர ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி பீளமேடு போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அவர்கள் கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் மையம் அருகே வந்தபோது கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் கோவை கவுண்டம்பாளையம் காந்திநகரை சேர்ந்த சொக்கநாதன், அவருடைய மனைவி சுகுணா (வயது 51) என்பது தெரியவந்தது.

கோர்ட்டில் வழக்கு

இதையடுத்து போலீசார் அந்த தம்பதியை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் ரூ.3 ஆயிரத்து 600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இது தொடர்பாக கோவையில் உள்ள இன்றியமையா பண்டங்கள் மற்றும் போதைப்பொருட்கள் வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கும்போதே சொக்கநாதன் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து சுகுணா மீது மட்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

10 ஆண்டு சிறை

இதைதொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட சுகுணாவுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி லோகேஸ்வரன் தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து போலீசார் சுகுணாவை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்