6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

மோட்டார் சைக்கிள்களில் 40 கிலோ கஞ்சா கடத்திய 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. தீ்ர்ப்பை கேட்டதும் கூச்சலிட்டு அவர்கள் தகராறு செய்ததால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-12 19:43 GMT

மோட்டார் சைக்கிள்களில் 40 கிலோ கஞ்சா கடத்திய 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. தீ்ர்ப்பை கேட்டதும் கூச்சலிட்டு அவர்கள் தகராறு செய்ததால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

கஞ்சா கடத்திய வழக்கு

மதுரை பழங்காநத்தம் பைகாரா பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் கடந்த 23.3.2021 அன்று அந்தப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 3 மோட்டார் சைக்கிள்களில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் வந்தனர்.

அவர்களை பிடித்து சோதனை செய்ததில் மோட்டார் சைக்கிள்களில் 40 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் அவர்கள் வைத்திருந்தனர்.

6 பேர் கைது

இதையடுத்து கஞ்சா மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்ததுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்ற தழும்பு லட்சுமணன் (வயது 26), சூர்யா என்ற கீரைத்துறை சூர்யா (27), திருமலை (25), கோபி (26), தீபக் (25), சித்திரவேல் என்ற சூர்யா (26) என்பது தெரிந்தது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜய பாண்டியன் ஆஜரானார்.

விசாரணை முடிவில் மேற்கண்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சாட்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டது.

10 ஆண்டு சிறை

இதையடுத்து 6 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து, நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை கேட்டதும் குற்றவாளிகள் 6 பேரும் கோர்ட்டு வளாகத்தில் கடும் கூச்சலிட்டு, தகராறில் ஈடுபட்டனர். போலீசாருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான போலீசார் அங்கு வந்து அவர்களை மதுரை சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்