10 ஆண்டுகள் சிறை தண்டனை
கும்பகோணம் அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் உள்பட 10 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
கும்பகோணம் அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் உள்பட 10 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
விவசாயி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ராஜேந்திர சோழகம் கிராமம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் கல்யாண குமார் (வயது 49). இவரும், நாகமங்கலம் மூலங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி காளிமுத்துவும்(40) உறவினர்கள்.
கல்யாணகுமார், கதிர் அறுக்கும் எந்திரத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். அந்த எந்திரத்ைத காளிமுத்து மேற்பார்வையிட்டு வந்தார்.
கதிர் அறுக்கும் எந்திரத்தின் டிரைவராக சேலம் மாவட்டம் கங்கைவெளி நடுவூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் குமார் என்பவர் வேலை பார்த்து வந்தார்.
நெல் அறுவடை எந்திரம்
நெல் அறுவடை காலத்தில் கல்யாணகுமார், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநீலக்குடியை அடுத்து உள்ள விட்டலூர் கிராமத்துக்கு நெல் அறுவடை எந்திரத்தை எடுத்து வந்து வாடகைக்கு விடுவது வழக்கம். அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி வழக்கம்போல் கல்யாண குமார் தனது கதிர் அறுக்கும் எந்திரத்தை விட்டலூர் கிராமத்திற்கு கொண்டு வந்தார்.
அவருடன் காளிமுத்து மற்றும் டிரைவர் குமார் ஆகியோரும் உடன் வந்தனர். அப்போது விட்டலூர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர், அஞ்சம்மாள் என்பவரது வயலில் விளைந்துள்ள நெல்லை அறுவடை செய்ய வேண்டும் எனக்கூறி கதிர் அறுக்கும் எந்திரத்தை வாடகைக்கு கேட்டுள்ளார்.
தகராறில் ஈடுபட்டனர்
அதன்படி கல்யாணகுமார் பார்த்திபன் கூறிய வயலில் தனது கதிர் அறுக்கும் எந்திரத்தின் மூலம் அறுவடை பணிகளை செய்து வந்தார். அப்போது அங்கு வந்த விட்டலூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் மனோகரன்(51), அன்பழகன்(50), மணிவண்ணன்(44), மனோகரன் மகன் கார்த்தி(27), இளங்கோவன்(42), கீழத்தெரு பகுதியை சேர்ந்த குணசேகரன்(54), அன்பழகன் மகன் தியாகராஜன்(31), வடக்கு மூலங்குடி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன்(50), தெற்கு மூலங்குடி பகுதியை சேர்ந்த ராமதாஸ்(58), மேலத்தெரு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சிலம்பரசன்(35) ஆகியோர் அறுவடை நடந்து கொண்டிருந்த வயலுக்கு சென்று அறுவடை பணிகளில் ஈடுபட்டிருந்த கல்யாணகுமார், காளிமுத்து, டிரைவர் குமார் ஆகியோரிடம் வயல் உரிமையாளருக்கும், தங்களுக்கும் பிரச்சினை இருப்பதால் உடனடியாக அறுவடை பணிகளை நிறுத்த சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த காளிமுத்துவை மனோகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காலால் எட்டி உதைத்து கைகளால் தாக்கி அடித்து உதைத்தனர். இதனை தடுக்க வந்த டிரைவர் குமார் மற்றும் கல்யாணகுமார் ஆகியோரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
10 பேர் கைது
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து மயங்கி கிடந்த காளிமுத்துவை கல்யாணகுமார் மற்றும் டிரைவர் குமார் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், காளிமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து கல்யாணகுமார் திருநீலக்குடி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மனோகரன் உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலா 10 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, குற்றவாளிகள் 10 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் விஜயகுமார் வாதாடினார்.
கும்பகோணம் கோர்ட்டில் நேற்று ஒரு வழக்கில் 10 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.