வளர்ப்பு நாய் கடித்து 10-வயது சிறுமி படுகாயம்
வளர்ப்பு நாய் சிறுமியை நோக்கி ஆக்ரோஷமாக ஓடி வந்தது.;
கோவை,
கோவையை அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார். இவருடைய மகள் அக் ஷயா கீர்த்தி (வயது 10). 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் கட்டப்படாமல் இருந்த வளர்ப்பு நாய் ஒன்று திடீரென்று ஆக்ரோஷமாக ஓடி வந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி, நாயிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அந்த நாய், சிறுமி மீது பாய்ந்து கழுத்து, தோள்பட்டை, காது உள்ளிட்ட இடங்களில் கடித்துக்குதறியது.
இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறித்துடித்தார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.
வளர்ப்பு நாய் கடித்து 10-வயது சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.