10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
வேடசந்தூர் அருகே 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.;
வேடசந்தூர் அருகே மாரம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட தவசிகுளத்துப்பட்டியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். அப்போது அவர் மரக்கன்றுகள் நட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காந்திராஜன் எம்.எல்.ஏ. பேசுகையில், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மாயனூர் அணையில் இருந்து மோட்டார் மூலம் ராட்சத குழாய்கள் வழியாக தண்ணீரை எடுத்துவந்து, வேடசந்தூர் தொகுதியில் உள்ள குளங்களை நிரப்ப முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் அர.சக்கரபாணி உறுதுணையாக இருந்து, இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை வேண்டும் என்றார்.
அதன்பிறகு அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பொன்மொழியான மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என்ற கூற்றை செயல்படுத்தும் நோக்கத்தில் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மரம் நடும் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மாயனூர் அணையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, வேடசந்தூர் தொகுதியில் உள்ள குளங்களில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சரிடம் பரிந்துரை செய்யப்படும். மாரம்பாடி ஊராட்சி பெருமாள்கோவில்பட்டி, தீத்தாகவுண்டன்பட்டி ஆகிய கிராமங்களில் அனைத்து வீட்டிற்கும் 3 மாதங்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பழனி ஆர்.டி.ஓ. சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், விஜயலட்சுமி, தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் பூர்ணம் சங்கீதா, வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.எஸ்.டி.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், வேடசந்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், மாரம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரொசாரியோ, துணைத்தலைவர் தனிக்கொடி, ஒன்றியக்குழு கவுன்சிலர் தேவசகாயம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.