கோடை மழையால் 10 ஆயிரம் ஏக்கர் பருத்தி பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் கோடை மழையால் 10 ஆயிரம் ஏக்கர் பருத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-05-07 18:45 GMT

கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்டத்தில் கோடை மழையால் 10 ஆயிரம் ஏக்கர் பருத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருத்தி சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், மன்னார்குடி, வலங்கைமான், கோட்டூர், குடவாசல், கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களில் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருத்தி பஞ்சு அதிகமான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதால் இந்த ஆண்டு விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டினார். அதனால் கடந்த ஆண்டைவிட 2 ஆயிரம் ஏக்கர் கூடுதலாக பருத்தி சாகுபடி செய்தனர்.

தற்போது பருத்தி செடிகள் பூக்கள் பூத்தும், காய்கள் காய்த்தும் நன்கு வளர்ந்துள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக பெய்து வரும் கோடை மழையால் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

வயல்களில் தேங்கிய மழைநீர்

பருத்தி சாகுபடியை பொறுத்தவரை வேர் பகுதிகளில் தண்ணீர் இருக்கக் கூடாது. அதனால் தான் காவிரி டெல்டா பகுதிகளில் கோடையில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் பருத்தி வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

பருத்தி சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இப்போது கோடை மழையால் கொரடாச்சேரி, குடவாசல், வடபாதிமங்கலம், கோட்டூர், வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மகசூல் குறையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே உடனடியாக வயல்களில் இருந்து மழைநீரை வெளியேற்ற அரசு உதவி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பருத்தி பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்