பாசனத்துக்கு 10 சுற்று தண்ணீர் வழங்க வேண்டும்

பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் பாசனத்துக்கு 10 சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம், விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2023-07-27 20:00 GMT

பொள்ளாச்சி

பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் பாசனத்துக்கு 10 சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம், விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடைமடை வரை தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க விவசாயிகள் வந்தனர். அங்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனுவை சப்-கலெக்டரிடம் வழங்கினர். பின்னர் கூட்டம் முடிந்ததும் விவசாயிகள் கூறியதாவது:-

கடைமடை வரை தண்ணீர்

பி.ஏ.பி. பாசன விவசாயிகள் நலச்சங்கம், காங்கயம்-வெள்ளக்கோவில் நீர்பாசன சங்கம், திருப்பூர் மாவட்டம் உப்பாறு பாதுகாப்பு சங்கம் ஆகியவை சார்பில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பி.ஏ.பி. தண்ணீர் கடைமடை வரை வந்து சேராதது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பி.ஏ.பி. திட்டம் கடந்த 15 ஆண்டுகளாக சீரழிந்து கடைமடை வரை தண்ணீர் வருவதில்லை.

முக்கியமான பிரச்சினை என்னவென்றால் அன்று ஆரம்பித்த ஆயக்கட்டு நிலைமைதான் இன்று வரை உள்ளது. இன்று வணிக பயன்பாட்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலங்களை எல்லாம் கணக்கில் எடுத்து, அந்த நிலங்களை கழித்து மீதமுள்ள விவசாய நிலங்களுக்கு ஆரம்ப காலத்தில் இருந்தது போல் 10 சுற்று தண்ணீர் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

போராட்டம் நடத்துவோம்

இதேபோன்று கால்வாய்க்கு அருகில் உள்ள நிலங்களில் கிணறு தோண்டி சட்டவிரோதமாக ஆயக்கட்டு இல்லாத பகுதிகளுக்கு நீர்பாய்ச்சுவதை தடுக்க சப்-கலெக்டர் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தண்ணீர் திருட்டை தடுத்து, பதிவு பெற்ற ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும். உரிமை நீர் கிடைக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்