சிதம்பரம்,
புதுச்சேரி டவுன் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி கவிதா (வயது 45). உறவினர் வீட்டு நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக இவர் சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து வல்லம்படுகைக்கு பஸ் ஒன்றில் புறப்பட்டார். அந்த பஸ் வல்லம்படுகைக்கு சென்றதும், அதில் இருந்து அவர் இறங்கி உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் தான் கொண்டு வந்த பையை பார்த்தபோது, அதில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை. அதனை மர்ம நபர் யாரோ அபேஸ் செய்து சென்றது தெரிந்தது. இது குறித்து கவிதா சிதம்பரம் நகர போலீசில் புகார் அளித்தார்.
ரூ.3½ லட்சம்
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பஸ்சில் இருந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி கவிதா வைத்திருந்த பையை திறந்து அதில் இருந்த 10 பவுன் நகையை மர்மநபர் அபேஸ் செய்து சென்றது தெரிந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து ஓடும் பஸ்சில் பெண்ணிடம் இருந்து நகையை அபேஸ் செய்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.