கடைக்குள் புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலையில் கடைக்குள் புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-06-08 18:21 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கடைக்குள் புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நோட்டு புத்தகம் விற்பனை கடை

திருவண்ணாமலை நகரத்தில் உள்ள சின்னக்கடை வீதி என்பது முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. தினமும் காலை முதல் இரவு வரை இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த சின்னக்கடை வீதியில் திருவண்ணாமலை குபேர நகரை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மனைவி கவிதா என்பவர் நோட்டு புத்தகம் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணிந்தபடி வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 'ஹெல்மட்டை' கழற்றி மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு அந்த கடையில் பேப்பர் வாங்குவது போன்று நின்று கொண்டிருந்தார்.

10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பேப்பர் பண்டல் எடுப்பதற்காக கவிதா கடைக்குள் சென்ற போது அந்த வாலிபர் திடீரென கடைக்குள் புகுந்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு அவரை தள்ளி விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்...திருடன்... என கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

வாலிபருக்கு வலைவீச்சு

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்