கதண்டுகள் கடித்ததால் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
கதண்டுகள் கடித்ததால் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் அரசுக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 62). இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் முருங்கை பயிரிட்டுள்ளார். நேற்று மாலை இவரது விவசாய நிலத்தில் அவரும், பட்ட கட்டாங்குறிச்சியை சேர்ந்த வளர்மதி(53), சின்னமணி (47), செந்தமிழ் செல்வி (28), சரிதா (24), பவளக்கொடி (43), வளர்மதி (31), அஞ்சலை (37), மாலதி (47), சந்திரா (50) ஆகியோரும் களை எடுத்தனர். அப்போது அருகே உள்ள ஆலமரத்தில் இருந்து கூட்டமாக வந்த கதண்டுகள் 10 பேரையும் கடித்தன. வலியால் துடித்த அவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, கதண்டுகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.