திருநின்றவூரில் வீடு புகுந்து ரூ.10 லட்சம் பந்தய புறாக்கள் திருட்டு
திருநின்றவூரில் வீடு புகுந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 16 பந்தய புறாக்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
ஆவடியை அடுத்த திருநின்றவூர் நெமிலிச்சேரி அம்மன் நகர் முதல் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 22). போரூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சிறு வயதிலிருந்து புறா வளர்க்கும் ஆசை இருந்ததால் வெளிநாட்டு புறாக்களை வாங்கி வீட்டில் வளர்த்து வந்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக சுமார் 16 புறாக்களை வளர்த்து வந்தார். அந்த புறாக்களின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. புறாக்களை பந்தயத்தில் விடுவதற்காக வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இவர் வீட்டின் மேல்மாடியில் இருந்த கூண்டில் வைக்கப்பட்டிருந்த புறாக்களுக்கு உணவு கொடுத்து விட்டு இரவு பணிக்காக சென்றுவிட்டார். மறுநாள் காலை வந்து பார்த்த போது கூண்டில் இருந்த 16 புறாக்கள் மற்றும் புறா முட்டைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஸ்ரீதர் திருநின்றவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புறாக்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.