நூதன முறையில் கடத்திய ரூ.10 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

காரைக்காலில் இருந்து முத்துப்பேட்டைக்கு வேனில் மீன் ஏற்றி செல்வது போல் நூதன முறையில் கடத்தி சென்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Update: 2023-01-10 18:45 GMT

காரைக்காலில் இருந்து முத்துப்பேட்டைக்கு வேனில் மீன் ஏற்றி செல்வது போல் நூதன முறையில் கடத்தி சென்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

8 இடங்களில் சோதனை சாவடி

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வந்தது.இதனை, தடுக்க மாவட்டத்தில் 8 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரகசிய தகவல்

இந்த நிலையில் காரைக்காலில் இருந்து சரக்கு வேனில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்ேதகப்படும் வகையில் வேகமாக வந்த சரக்கு வேனை மறித்து சோதனை செய்தனர்.

அந்த வேனில் மீன் பதப்படுத்தும் ஐஸ் பெட்டிகளுக்கு நடுவே, புதுச்சேரி மாநில உயர்தர மதுபாட்டில்கள் பெட்டி, பெட்டியாக இருந்தது. மேலும் அந்தவேனுக்கு முன்பு பாதுகாப்புக்காக கார் ஒன்று சென்றதும் தெரிய வந்தது.

ரூ.10 லட்சம் மது பாட்டில்கள்

தொடர்ந்து சரக்கு வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே டி.ஆர். பட்டினத்தை சேர்ந்த அரவிந்தன் (வயது 28) என்பதும், இவருக்கு பாதுகாப்பாக முன்னாள் காரில் சென்றவர் காரைக்காலை சேர்ந்த தமிழரசன் (35) என்பதும் தெரிய வந்தது.

மேலும் இவர்கள் காரைக்காலில் இருந்து முத்துப்பேட்டைக்கு, ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை நூதன முறையில் சரக்கு வேனில் மீன் ஏற்றி செல்வது போல் கடத்தி சென்றுள்ளனர்.

2 பேர் கைது

இதையடுத்து அரவிந்தன், தமிழரசன் ஆகியோரை கைது செய்த போலீசார், பாதுகாப்புக்கு சென்ற கார், சரக்கு வேனுடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடவடிக்கை தொடரும்

பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் மது கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து முத்துப்பேட்டைக்கு மதுபாட்டில்களை மீன் வண்டியில் நூதன முறையில் கடத்தி சென்ற 2 பேரை கைது செய்துள்ளோம்.முத்துப்பேட்டையில் உள்ள ஒரு குடோனில் வைத்து இந்த மது பாட்டில்களுக்கு ஸ்டிக்கரை ஒட்டி விற்பனை செய்ய முயற்சித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நாகை மாவட்டத்தில் மதுக்கடைத்தலில் ஈடுபடுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ேசாதனை நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்